கதம்பம்

பனை ஓலை விசிறி வந்து விட்டது: சொக்க வைக்கும் சுகமான காற்றை அள்ளித் தரும்

Published On 2023-03-15 10:42 GMT   |   Update On 2023-03-15 10:42 GMT
  • பனை மரம் பொதுவாக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனாலும் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது.
  • பனை ஓலை விசிறிகள் உடல் நலத்துக்கு சிறப்பானது என்று மருத்துவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.

பனை மரத்தை நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். பனை மரத்தின் வேர் முதல் உச்சி வரை அனைத்து பாகங்களும் பயன்படும். இது தொடர்பாக நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் ஒரு பனை மரம் மனிதருக்கு 200-க்கும் மேற்பட்ட பலன்களை தருவதாக கண்டுபிடித்துள்ளனர்.

பனை மரத்தில் இருந்து ஒருவருக்கு தேவையான அத்தனை அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதால் தான் அதை கற்பக விருட்சம் என்று நம் முன்னோர்கள் அழைத்தனர். பனம் பழம், நுங்கு, பதனி, பனங்கிழங்கு, பனை ஓலை, கற்கண்டு, கருப்பட்டி, உத்திரகட்டை, முகூர்த்தகால் கட்டை, பாளை என்று பனை மரம் தரும் பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

பனை மரம் பொதுவாக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனாலும் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது. ஒரு வலுவான பனை மரத்தை அடியோடு சாய்க்க வேண்டும் என்றால் ஒரு வாரம் புயல் வீசினால்தான் முடியும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இப்படி எந்த அளவுக்கு பனை மரம் வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது பலன்களை தந்துகொண்டே இருக்கும். எவ்வளவு பெரிய வறட்சியையும் தாங்கும் பனை மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

உலகில் 108 நாடுகளில் பனைமரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தான் பனை மரங்கள் அதிகம் இருக்கின்றன. அதிலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக பனை மரங்களை காண முடியும்.

ஒரு காலத்தில் 50 கோடிக்கும் மேல் பனை மரங்கள் இருந்தன. தற்போது 5 கோடி பனை மரங்கள் கூட இல்லை.

கோடை காலத்தில் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலை மூலம் செய்யப்படும் விசிறிகள் மிகுந்த வரவேற்பை பெறும். பனை ஓலை விசிறிகள் உடல் நலத்துக்கு சிறப்பானது என்று மருத்துவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.

பனை ஓலை விசிறி மூலம் விசிறினால் சொக்க வைக்கும் சுகமான குளிர்ந்த காற்று கிடைக்கும். ஆதி காலத்தில் பனை ஓலை விசிறிகளை வைத்திருப்பதை அரசர்களும், பணக்காரர்களும் கவுரவமாக கருதினார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது அவர்கள் பனை ஓலை விசிறிகளை அதிகளவு பயன்படுத்தியது பல்வேறு வரலாற்று பதிவுகளில் உள்ளது.

மின் விசிறிகள் புழக்கத்துக்கு வந்தபிறகு பனை ஓலை விசிறி பயன்பாடு 90 சதவீதம் குறைந்து போனது. என்றாலும், இன்றும் பனை ஓலை விசிறியை விரும்பி பயன்படுத்துபவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழகத்தில் திருத்தணி அருகே குறுமணி கிராமத்திலும், கடலூர் அருகே அண்ணவல்லி கிராமத்திலும் பனை ஓலை விசிறிகள் செய்வதை 5 தலைமுறையாக இன்றும் செய்து வருகிறார்கள். இத்தகைய கிராமத்தினர் மூலம் பனை ஓலை விசிறி நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை ஆகிறது.

பனை ஓலை விசிறி தயாரிப்பவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4 மாதங்கள்தான் அதிகமான ஓலை விசிறி செய்யும் மாதங்களாக இருக்கும். அந்த வகையில் தற்போது சென்னைக்கு பனை ஓலை விசிறி மிக அதிக அளவில் வந்துவிட்டது. கோயம்பேடு, அம்பத்தூர், மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்களத்தூர், திருவொற்றியூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை விசிறி விற்பனை அமோகமாக நடக்கிறது.

ஒரு பனை ஓலை விசிறி 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை ஆகிறது. வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்ட விசிறிகள் அதிக விலைக்கு விற்பனை ஆகின்றன.

Tags:    

Similar News