- குடும்பத்திற்காக சம்பாதிக்கின்றேன் என்கிறார்கள்.
- நம்மில் பெரும்பாலோர் இப்படித் தான் இருக்கின்றோம் .
ஒருவன் எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டேயிருந்தான் .
அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் 'நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கின்றாயே எதற்கு?' என்று கேட்டான் .
அவன் "குளிர் காய்வதற்கு" என்றான்.
கேட்டவனோ 'நீ குளிர் காய்வதை நான் பார்த்ததில்லையே?'என்றான்.
அவனோ "சுள்ளி பொறுக்கவே நேரம் சரியாக இருக்கின்றது .குளிர் காய நேரமில்லை"' என்றான் .
நம்மில் பெரும்பாலோர் இப்படித் தான் இருக்கின்றோம்
பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு. ஆனால், சிலர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். அந்தப் பணத்தால் பெறக் கூடிய சுகங்களை அனுபவிப்பதில்லை.
கேட்டால் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்கிறார்கள். இதென்ன பைத்தியக்காரத்தனம்?
பணம் சம்பாரிப்பது சிலருக்கு போதைபழக்கம் போல ஆகிவிட்டது. குடும்பத்திற்காக சம்பாதிக்கின்றேன் என்கிறார்கள். ஆனால், அவர்கள் குடும்ப வாழ்வை அனுபவிப்பதில்லை .
மனைவியிடமோ குழந்தைகளிடமோ சிரித்துப் பேசி மகிழ்வதற்கு நேரம் இல்லை என்கிறார்கள் .
இந்த இன்பங்களை அனுபவிக்கத்தானே பணம். இந்த இன்பங்களை அனுபவிக்கத் தடையாக இருக்கின்றது என்றால் பின் எதற்குப் பணம்.
ஒருவன் பெட்ரோல் வாங்கி சேமித்துக் கொண்டேயிருக்கின்றான். காரில் செல்வதில்லை என்றால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?
எவனொருவன் தூங்க வேண்டிய நேரத்தில், எந்தக் கவலையும் இல்லாமல் ஆனந்தமாக உறங்குகின்றானோ அவன் தான் உண்மையில் பணக்காரன் .
எனவே அளவோடு உழைத்து ஆனந்தமாக வாழப் பழகிக் கொள்வோம்.