- பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது.
- எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து.
நாடகத்தில் இல்லாத வசனங்களைப் பேசி அதிர்ச்சியூட்டுவது எம்.ஆர். ராதாவின் வாடிக்கை. அதுவே பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது.
'தூக்கு மேடை' நாடகத்தில் பாண்டியனாக நடித்த கலைஞரிடம் "உங்க அண்ணாவை தளபதி தளபதின்னு சொல்றீங்களே, அவரு எந்தப் போருக்குத் தளபதி" என்று திடீரெனக் கேட்டார் ராதா.
கலைஞர் சுதாரித்துக்கொண்டு, "வீணை வாசிக்கப்படும்போது மட்டும் வீணையல்ல. உறையில் இருந்தாலும் வீணைதான். அதுபோலத்தான் போருக்கும் அவர்தான் தளபதி. அமைதிக்காலத்திலும் அவர்தான் தளபதி" என்று சொன்னதாக பின்னாள்களில் கலைஞர் எழுதினார்.
எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து. அந்த நாடகத்துக்குத் தலைமை பெரியார். பாதி நாடகம் முடிந்து இடைவேளை நேரத்தில் பெரியார் பேசுகிறார். பார்வையாளரில் ஒருவர் எழுந்து, "இவரு பேச்சைக் கேட்க நாங்க காசுகொடுக்கலை. நாடகத்தைப்போடு" எனக் கத்துகிறார்.
மேக்அப் ரூமிலிருந்த ராதாவுக்குச் செய்தி போகிறது. பாதி மேக்கப்போடு வந்த ராதா, கத்தியவரைப் பார்த்து, "நாடகம் முடிஞ்சிடுச்சு, நீங்கள் போகலாம். இனி இவர்தான் பேசுவார்" என்றாரே பார்க்கலாம், பெரியாரே அசந்துவிட்டார். இந்தமாதிரி பதிலை அவரே எதிர்பார்க்கவில்லை.
- கவிஞர் நந்தலாலா.