- ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
- எல்லா பள்ளிகளிலும் புருஸ் லீ படம் இருந்தது, இன்றும் இருக்கின்றது.
அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாலுவார்த்தை கற்றானோ இல்லையோ 4 பேரை அடிக்க மறக்காமல் கற்றுகொண்டான்.
அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக ஹாங்காங் படத்திலும் வந்தான், ஆனால் முழுநேர தொழில் மற்றும் பொழுதுபோக்கு எங்காவது தெருவில் சண்டையிடுவது, போதாகுறைக்கு குங்பூ வேறு கற்றுவிட்டான், அட்டகாசம் தாளவில்லை.
அவன் குட்டி தாதாவாக வேறு மாறிவிட்டான், அவனுக்கு கீழ் 10 அடியாள். ஹாங்காங்கின் தெருசண்டையில் அவனே பிஸ்தா.
பொறுத்துபார்த்த தந்தை அவன் கையில் 100 டாலரை கொடுத்து அமெரிக்காவிற்கு விரட்டினார், காரணம் பொழுதுதோறும் பஞ்சாயத்து என்றால் எப்படி?
அமெரிக்கா சென்றவனுக்கு சும்மா இருக்க முடியவில்லை, சரி இங்கு அடிக்கமுடியாது எல்லோரும் இடிமாடு போல இருக்கின்றார்கள், சண்டை சொல்லிகொடுக்கலாம்..
குங்பூ கராத்தே டேக்வாண்டோ எல்லாம் கலந்து ஜீட்குண்டோ என அவனே ஒரு சண்டை கலை தொடங்கினான்.
நல்ல மாஸ்டர்தான், ஆனால் அவனின் ஆசை சினிமாவில் நடிக்க தூண்டியது, ஹாலிவுட்டில் நடிக்க சில உடலமைப்பு அவசியம், முதலில் உயரமாக நிறமாக கட்டுடலோடு நல்ல முகவெட்டில் இருக்கவேண்டும், ஐரோப்பியர் அல்லது அமெரிக்கராக இருக்க வேண்டும் என பல சட்டங்கள்.
ஒடுங்கிய தேகமும், இடுங்கிய கண்ணும் கொண்ட அந்த சீன இளைஞனை பரிகாசம் செய்தே விரட்டினார்கள், அவன் சீறியபடி சொன்னான் உங்களுக்கெல்லாம் நான் தான் போட்டி.
யார் நம்புவார்கள்? அந்த லீயினை விரட்டியே விட்டார்கள்.
ஹாங்காங் திரும்பிய லீ, புரூஸ் லீயானான். "தி பிக் பாஸ்", "ஸ்பிட் ஆஃப் பியூரி" ஆகிய இரு படங்களில் ஹாங்காங்கில் நடித்தான், பெயர் சொன்ன படங்கள்தான், ஆனால் ஹாலிவுட் கண்டுகொள்ளவில்லை.
ஓஓ.. அப்படியா இதோ பார் என "ரிட்டன் ஆப் தி டிராகன்" படத்தினை அவனே ஹாங்காங்கில் எடுத்தான், அது உலகெமெல்லாம் மக்களை கவர்ந்தது, குறிப்பாக இளைஞர்களை..
கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.
"யாராய்யா இவன் உடலை அப்படி வைத்திருக்கின்றான், எல்லா ஆயுதமும் அவன் கையில் அப்படி சுழல்கின்றது, ஆயுதம் இல்லாமலே எல்லா ஆயுதமும் சமாளிக்கின்றான் என அதிசயத்தது" உலகம்.
ஆம் அழகாலும், நடிப்பாலும், கேமரா கோணத்தாலும் இயங்கிய மேற்கு சினிமாவினை தன் சண்டைகாட்சி ஒன்றால் உடைத்து அதன் போக்கினை மாற்றினான் புருஸ் லீ.
அமெரிக்க முதலாளிகள் அவன்முன் குனிந்து நின்றார்கள், ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்தார்கள், எந்த ஹாலிவுட் அவனை விரட்டியதோ அதே ஹாலிவுட் காலில் விழுந்து அழைத்தது.
எந்த மனிதனுக்கும் வாய்க்க கூடாத சாபம் அவனுக்கு வாய்த்த்திருந்தது, ஆம் அவன் இறந்த பின்புதான் "எண்டர் தி டிராகன்" படம் வெளிவந்தது, வெற்றி என்றால் பெரும் வெற்றி. ஆனால் அதனை காணவோ, அதனை கொண்டாடவோ புருஸ்லி இல்லை.
அவன் ஹாலிவுட்டில் நடித்தது அந்த ஒரு படம் தான், ஆனால் சாகா புகழை அவனுக்கு கொடுத்தது, அதன் பின் உலகெங்கும் அவனால் கராத்தே, குங்பூ பள்ளிகள் தொடங்கபட்டன, எல்லா பள்ளிகளிலும் புருஸ் லீ படம் இருந்தது, இன்றும் இருக்கின்றது.
அவன் சாகும் பொழுது வயது வெறும் 32. இன்றுவரை அவன் சாவு மர்மமே,
-பிரம்ம ரிஷியார்