பள்ளி வாகனத்தில் திடீர் தீ- 17 மாணவர்கள் உயிர் தப்பினர்
- மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு பஸ், பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
- செங்கனூர் பகுதியில் பஸ் வந்தபோது, பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் படித்து வருவதால், அவர்களை பள்ளிக்குச் சொந்தமான பஸ் சென்று அழைத்து வருவதுண்டு.
இன்று காலையும் மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு பஸ், பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 17 மாணவ-மாணவிகள் இருந்தனர். செங்கனூர் பகுதியில் பஸ் வந்தபோது, பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
இதனை கவனித்த டிரைவர், உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் இருந்த மாணவ-மாணவிகளையும் கீழே இறங்கச் செய்தார். சற்று நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. சரியான நேரத்தில் டிரைவர் புகையை கவனித்து மாணவ-மாணவிகளை கீழே இறக்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.