சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இரு சீனர்கள் கைது
- பீகாரில் இந்திய-நேபாள எல்லையில் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்றது தெரிந்தது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள ரக்சவுலில் இருந்து இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாகப் பேசிய கிழக்கு சம்பரான் காவல்துறை கண்காணிப்பாளர் காந்தேஷ் குமார் மிஸ்ரா, சீனாவின் கிழக்கில் உள்ள ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜாவோ ஜிங், எப்யூ காங். இருவரும் நேற்று இரவு இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குள் வருவதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் நுழைய முயன்றதன் நோக்கம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. அவர்கள் இதற்கு முன்பு கடந்த 2-ம் தேதி ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அந்த நேரத்தில், அவர்கள் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர் . மேலும் விசாவுடன் இந்திய எல்லைக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.