செய்திகள்

பயங்கரவாத நடவடிக்கையில் உயிர் இழக்கும் துணை ராணுவ வீரர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி உதவித்தொகை

Published On 2017-05-20 21:49 GMT   |   Update On 2017-05-20 21:49 GMT
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உயிர் இழக்கும் துணை ராணுவ வீரர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நாதுலா(சிக்கிம்):

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று சிக்கிம் மாநிலத்தில் எல்லையோர பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், ஷெராதாங்க் ராணுவ நிலையில் உள்ள இந்திய-திபெத் எல்லை போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து படை வீரர்கள் மத்தியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

பயங்கரவாத மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது துணை ராணுவ வீரர்கள் தங்களுடைய உயிரை தியாகம் செய்ய நேரிடுகிறது. இவர்களுக்காக நாடு மிகுந்த பெருமை கொள்கிறது. துணை ராணுவ வீரர்கள் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டுகளுக்கும் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அதுவும் கரடு, முரடான யாரும் பணியாற்ற முடியாத பகுதிகளில் நாட்டை காக்கின்றனர்.

சண்டையில் உயிர்த்தியாகம் செய்யும் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கொடுப்பதன் மூலம் அதை ஈடுசெய்துவிட முடியாது. எனினும் அவர்களுடைய குடும்பம் எதிர்காலத்தில் எவ்வித கஷ்டத்தையும் சந்திக்க கூடாது. எனவே பயங்கரவாத நடவடிக்கையின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு இனி ரூ.1 கோடி உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்மையில், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 25 துணை ராணுவ வீரர்கள் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து உள்துறை மந்திரி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 
Tags:    

Similar News