செய்திகள்

பாரதிய ஜனதா மீது லாலு மகள் பாய்ச்சல்

Published On 2017-05-21 04:06 GMT   |   Update On 2017-05-21 04:06 GMT
மத்திய பிரதேசத்தில் ‘ஆன்லைன் செக்ஸ்' மோசடியில் பாரதிய ஜனதா தலைவர்களின் தொடர்பு குறித்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என லாலு மகள் மிசா பாரதி தெரிவித்துள்ளார்.
பாட்னா:

மத்திய பிரதேசத்தில் மாநில பா.ஜனதா ஊடக பொறுப்பாளர் நீரஜ் சாக்யா மற்றும் 7 பேரை ஆன்லைன் செக்ஸ் மோசடியில் போபால் இணைய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத்தின் மகளும், டெல்லி மேல்சபை எம்.பி.யுமான மிசா பாரதி டுவிட்டரில் சாடி உள்ளார்.

இதுபற்றி அவர், “பா.ஜனதா தலைவர்களுக்கு ஆன்லைன் செக்ஸ் மோசடியில் தொடர்பு இருப்பது குறித்து வெளியாகி உள்ள தகவல்கள், இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. பா.ஜனதா தலைவர்கள் சிலருக்கு ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவு அமைப்பு) ஏஜெண்டுகளுடன்கூட தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது” என கூறி உள்ளார்.

மேலும், “பா.ஜனதா, மற்றவர்களை நோக்கி விரல்களை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு முன், தனது தலைவர்களுக்கு ஆன்லைன் செக்ஸ் மோசடி போன்ற குற்றச்செயல்களில் எப்படி தொடர்பு ஏற்பட்டது, ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் அவர் கூறி உள்ளார்.

பீகாரில் லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது பினாமி சொத்து ஊழல் புகார் எழுந்து, அவர்களது வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில்தான் பா.ஜனதா மீது மிசா பாரதி பாய்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News