செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

Published On 2018-02-02 05:37 GMT   |   Update On 2018-02-02 05:37 GMT
ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. #Jallikattu
புதுடெல்லி:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில்  நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக அந்த மாநில சட்டமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டங்களை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



இவ்வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி உள்ளிட்ட 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அப்போது, மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான  வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அமர்வானது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் தனியாக சட்டம் இயற்றுவதில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து முடிவு எடுக்கும். #Jallikattu #tamilnews
Tags:    

Similar News