செய்திகள்

காஸ்கஞ்ச் கலவரத்தில் பலியானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2018-02-02 06:40 GMT   |   Update On 2018-02-02 06:39 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஸ்கஞ்ச் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #kaskanjclash #chandangupta #security
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் நகரில் குடியரசு தினத்தன்று விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, ‘திரங்கா யாத்ரா’  என்ற பெயரில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தின. இந்த பேரணியின் மீது ஒருதரப்பினர், கற்களை வீசினர். பதிலுக்கு பேரணியில் சென்றவர்களும் கற்களை வீசித் தாக்க, சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சரமாரியாக சுட்டனர். 

இந்த துப்பாக்கி சூட்டில் பேரணியில் வந்த சந்தன் குப்தா என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக, மாவட்ட போலீஸ் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், இந்த வன்முறை சம்பவம் மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்று உத்தரப்பிரதேச கவர்னர் ராம்நாயக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே, பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய குற்றவாளி சலீம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், காஸ்கஞ்ச் கலவரத்தில் இறந்த சந்தன் குப்தா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, போலீசார் கூறுகையில், சந்தன் குப்தாவின் பெற்றோருக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்தே அவர்களது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். #kaskanjclash #chandangupta #security #tamilnews
Tags:    

Similar News