செய்திகள்

சர்வதேச அளவில் மனித மேம்பாட்டு பட்டியலில் இந்தியாவிற்கு 130 வது இடம்

Published On 2018-09-14 15:12 GMT   |   Update On 2018-09-14 15:12 GMT
சர்வதேச அளவில் மனித மேம்பாட்டு குறியீட்டு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், ஒரு இடம் முன்னேறி இந்தியா 130-வது இடத்தை பிடித்துள்ளது. #humandevelopmentindex #HDI
புதுடெல்லி :

ஐக்கிய நாடுகள் மேம்பட்டு திட்டம் தொடர்பான மனித மேம்பாட்டு ஆய்வு முடிவுகள் இன்று வெளியானது. ஆரோக்கியமான வாழ்க்கை, கல்வியறிவு, வாழ்க்கை தரம் ஆகிய மூன்றையும் அடிப்படியாக வைத்து மனித மேம்பாட்டு குறியீட்டு பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் இந்தியா 130-வது இடத்தை பிடித்துள்ளது.

தெற்காசிய நாடுகளின் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு பட்டியலின் சராசரி புள்ளிகள் என 0.638 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா 0.624 புள்ளிகள் பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் பட்டியலில் முறையே 136 மற்றும் 150 வது இடங்களில் உள்ளது.

சர்வதேச அளவில் நார்வே, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதன்மை இடங்களை பெற்றுள்ளன. தெற்கு சூடான், மத்திய ஆப்ரிக்க குடியரசு மற்றும் புருண்டி போன்ற நாடுகள் பட்டியலில் கடைசி இடங்களை பெற்றுள்ளன.

மேலும், 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் வருமானம் 266 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் ஆண்களை விட பெண்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். பாராளுமன்ற தேர்தல்களில் 11.6 சதவிகதம் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

பள்ளிகளில் படிக்கும் ஆண்களில் 64 சதவிகிதம் பேர் உயர்கல்வி படிக்கும் நிலையில் பெண்கள் 39 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்கல்வி படிப்பதாகவும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. #humandevelopmentindex #HDI
Tags:    

Similar News