செய்திகள்

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு

Published On 2018-09-20 07:26 GMT   |   Update On 2018-09-20 07:26 GMT
பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கன வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. #SmallSavingsRates
புதுடெல்லி:

பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வகையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதம் குறித்து மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.30 சதவீதம் மற்றும் 0.40 சதவீதம் என்ற அளவில் உயர்த்தி அறிவித்துள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கையின்படி 1 முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 0.30 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டு டெபாசிட்டுகளுக்கு 0.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), செல்வமகள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் 0.40 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.


வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி கிடைக்கும். செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.5 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு 8.7 சதவீத வட்டி கிடைக்கும். இந்த வட்டி உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

கடந்த இரண்டு காலாண்டுகளாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்த காலாண்டில் வட்டி உயர்த்தப்பட்டதை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். #SmallSavingsRates

Tags:    

Similar News