செய்திகள்
முன்னாள் பிரதமர் தேவேகவுடா உறவினரின் வங்கி லாக்கரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6½ கோடியை காணலாம்.

சிவமொக்காவில் வருமான வரி அதிகாரிகள் சோதனை: தேவேகவுடா உறவினரிடம் ரூ.6½ கோடி பறிமுதல்

Published On 2019-04-06 01:55 GMT   |   Update On 2019-04-06 01:55 GMT
சிவமொக்காவில் நடந்த வருமான வரி அதிகாரிகள் சோதனையில் தேவேகவுடாவின் உறவினருக்கு சொந்தமான வங்கி லாக்கரில் இருந்து ரூ.6½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #ElectionComission #MoneySeized #DeveGowda
பெங்களூரு :

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வருபவர் பரமேஸ். இவர், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் உறவினர் ஆவார். பரமேசுக்கு, சிவமொக்காவில் வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி பரமேசுக்கு சொந்தமான வீடு மற்றும் ஷோரூமில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த சோதனையை நடத்தி இருந்தனர். 20 மணி நேரம் இந்த சோதனை நடந்திருந்தது.

சோதனையின் போது பரமேஸ் வீடு, ஷோரூமில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருந்தனர். மேலும் பரமேசுக்கு ஒரு தேசிய வங்கியில் லாக்கர் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் அந்த லாக்கரின் சாவி காணாமல் போய் விட்டதாக அதிகாரிகளிடம் பரமேஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பரமேசுக்கு சொந்தமான வங்கி லாக்கரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அப்போது அந்த லாக்கரில் பாலிதீன் கவரில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி மெஷின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது. அப்போது ரூ.6½ கோடி இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி பரமேசிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். அதே நேரத்தில் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதையும் அதிகாரிகளிடம் பரமேஸ் வழங்கவில்லை. இதையடுத்து, ரூ.6½ கோடியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.

இதற்கிடையில், பணம் சிக்கியது குறித்து விசாரணைக்கு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும்படி பரமேசுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி லாக்கரில் சிக்கிய ரூ.6½ கோடியை வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவேகவுடாவின் உறவினரிடம் ரூ.6½ கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ElectionComission #MoneySeized #DeveGowda
Tags:    

Similar News