ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவரும், எம்எல்ஏ-வுமான தேவேந்திர சிங் ராணா காலமானார்
- ஜம்மு காஷ்மீரில் ஒரு சிறந்த தொழில்முனைவோராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
- ராணாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரரும், நக்ரோடா எம்எல்ஏ-வுமான தேவேந்தர் சிங் ராணா, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59.
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணா சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். அவருக்கு மனைவி குஞ்சன் ராணா மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
1965-ம் ஆண்டு ஜம்முவின் தோடா மாவட்டத்தில் டோக்ரா குடும்பத்தில் பிறந்த இவர், முன்னாள் அதிகாரி ராஜீந்தர் சிங் ராணாவின் மகனும், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரரும் ஆவார்.
சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பிறகு, ராணா சொந்தமாக ஆட்டோமொபைல் நிறுவனத்தை நிறுவி வியாபாரத்தில் இறங்கினார். ஜம்காஷ் வெஹிகிலேட்ஸ் குழுமம் என்ற பல கோடி மதிப்பிலான நிறுவனத்தையும் புதிதாக ஒரு கேபிள் டிவி சேனலையும் உருவாக்கி, ஜம்மு காஷ்மீரில் ஒரு சிறந்த தொழில்முனைவோராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
தேசிய மாநாடு கட்சியில் (NC) ராணா தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். உமர் அப்துல்லாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக, ஜம்முவில் கட்சி வியூகங்களை வடிவமைப்பதில் கணிசமான பங்கு வகித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத்திற்கான தனது முதல் முயற்சியில், ராணா நக்ரோட்டா சட்டமன்ற தொகுதியில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2021 அக்டோபரில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக NC உடன் இருந்த பிறகு, ராணா ராஜினாமா செய்து பாஜக-வில் இணைந்தார். ஜம்மு பகுதியில் உள்ளூர் சமூகங்களுடனான நெருங்கிய தொடர்புகள் அவரை ஜம்மு காஷ்மீர் அரசியலில், குறிப்பாக பிஜேபிக்கு ஒரு முக்கிய நபராக ஆக்கியது.
ராணாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.