செய்திகள்

நாட்டில் பதற்றமான சூழலை மோடி உருவாக்கிவிட்டார்: குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2019-04-09 01:59 GMT   |   Update On 2019-04-09 01:59 GMT
நாட்டில் பதற்றமான சூழலை பிரதமர் மோடி உருவாக்கிவிட்டார் என்று முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். #Kumaraswamy #PMModi
பெங்களூரு :

பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ண பைரேகவுடாவை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி யஷ்வந்தபுரத்தில் பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது:-

பெங்களூருவில் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள். இந்த திட்டத்தை ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளோம். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு பலமாக உள்ளது.

இந்த அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பெங்களூருவில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ.17 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பா.ஜனதா வேட்பாளர் சதானந்தகவுடா, என்னை பார்த்து ஓட்டுப்போட வேண்டாம், மோடியை பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்கிறார். மோடிக்கு ஊடகங்கள் எவ்வளவு விளம்பரம் வழங்கினாலும், அவர் மீண்டும் பிரதமராக முடியாது.

வருமான வரித்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளை மோடி தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மிரட்டுகிறார். இளைஞர்கள், மோடி, மோடி என்று கோஷமிடுகிறார்கள்.



இளைஞர்களுக்கு மோடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தாரா?. மோடி தனது தவறான திட்டங்களால் ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் தள்ளினார். இது தான் அவரது சாதனை. இதை இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

மோடி ஒரு மிக மோசமான அரசியல்வாதி. நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளார். யார் மக்களின் நலனிற்காக உழைக்கிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு ஓட்டுப்போடுங்கள்.

இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண பைரேகவுடாவை மக்கள் ஆதரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவர் இ்ந்த பகுதி மக்களுக்காக குரல் கொடுப்பார்.

நான் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒடிந்து விழுந்துவிடுவேன் என்று ஈசுவரப்பா கூறி இருக்கிறார். எனக்கு மக்களின் ஆசி உள்ளது. அதனால் எனது உயிர் உறுதியாக உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு தெய்வபலம் உள்ளது.

இவ்வாறு குமாரசாமி பேசினார். #Kumaraswamy #PMModi
Tags:    

Similar News