ஒமைக்ரான் பரவலை தடுக்க மும்பையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு அமல்
மும்பை:
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2-ந்தேதி பெங்களுர் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பலருக்கு ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது.
கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டது. இதே போல் ஒமைக்ரான் வைரஸ் நோய் மகாராஷ்டிராவில்தான் தற்போது அதிக அளவில் பாதித்துள்ளது.
தான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்துவந்த 3 வயது குழந்தை உள்பட புதிதாக 7 பேருக்கு நேற்று இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாநிலத்தின் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் 9 பேருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 2 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவ தொடங்கி உள்ளதால் இதனை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக மும்பையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...கொரோனா அதிகரிப்பு - நியூயார்க்கில் முக கவசம் கட்டாயம்