இந்தியா
ஐந்து மாநிலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து கருத்து கணிப்பு
உத்தரபிரதேசத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுவதாக 75 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் இந்தியா டுடே நாளிதழ் மூட் ஆஃப் தி நேஷன் என்ற தலைப்பில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளது.
அதன் முடிவுகள் படி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஆதரவு கிடைத்துள்ளது. பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 75 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்டில், பிரதமர் மோடியின் செயல் திறனுக்கு 59 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. கோவாவைப் பொறுத்தவரை, 67 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும், 13 சதவீதம் பேர் சராசரியாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில், 73 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும், எட்டு சதவீதம் பேர் சராசரியாக இருப்பதாகவும், 18 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாகவும் கருதுகின்றனர். பஞ்சாபில் 37 சதவீதம் பேர் மட்டுமே செயல்திறன் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். 44 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.