இந்தியா
நாடு திரும்பிய இந்தியர்கள்

கடைசி இந்தியரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

Published On 2022-03-04 18:11 GMT   |   Update On 2022-03-04 18:11 GMT
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி:

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்து உள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  

தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலமாக  அடுத்த 24 மணி நேரத்தில் 16 விமானங்கள் உக்ரைனின் அண்டை நாட்டிற்கு செல்லவுள்ளன.

உக்ரைன் நாட்டு  அரசாங்கத்திடம் இந்திய மாணவர்களை மீட்பதற்காக சிறப்பு ரயில்களை இயக்கும்படி கேட்டு இருந்தோம். ஆனால் இதுவரை அதுபற்றி எந்த தகவலும் இல்லை. அதனால் நாங்கள் பேருந்துகளை இயக்குகிறோம்.

குறிப்பாக, கார்கிவ் மற்றும் பிசோச்சின் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். 900-1000 இந்தியர்கள் பிசோச்சின் பகுதியில் இருக்கின்றனர் மற்றும் சுமியில் 700 பேர் சிக்கியுள்ளனர்.  

உக்ரைனில் உள்ள கடைசி இந்தியரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும். வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவரை மீட்டுள்ளோம். மேலும், நேபாள மக்களை மீட்கும் படி கோரிக்கை வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News