இந்தியா
இந்திய சினிமா குறித்த தேசிய கருத்தரங்கில் அனுராக் தாக்கூர்

இந்திய திரைப்படங்களுக்கு உலகெங்கிலும் வரவேற்பு- மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பெருமிதம்

Published On 2022-05-04 18:38 GMT   |   Update On 2022-05-04 18:38 GMT
உலகளாவிய பொழுதுபோக்கின் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்திய சினிமா இருப்பதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:

மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய சினிமா குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது:

இந்திய திரைப்படத் துறையும், மத்திய அரசும், நமது கலாச்சாரத்தின் திறனை மிக உயர்ந்த மட்டத்தில் அங்கீகரித்துள்ளன.

தாராளமயமாக்கல், கட்டுப்பாடு நீக்கம், ஊடக தனியார் மயமாக்கல் ஆகியவை கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவில் திரைப்படத் துறையை மாற்றியமைத்துள்ளன. 

மேற்கத்திய உலகிற்கு வெளியே உலகளாவிய பொழுதுபோக்கின் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்திய சினிமா உள்ளது.  உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் இந்திய சினிமா பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய திரைப்படத் தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்திய சினிமா திகழ்கிறது.  பிராந்தியத் திரைப்படங்கள் கூட தேசிய அளவில் சமமான அளவில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மந்திரி அனுராக் தாக்கூர், பிரான்சில் நடைபெறவுள்ள 75-வது கேன்ஸ் திரைப்படவிழாவின் இடையே நடைபெறும் மார்சே டு பிலிம் எனப்படும் திரைப்பட சந்தையில், அதிகாரபூர்வ கவுரவத்திற்குரிய நாடு என்ற அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Similar News