null
குவைத் தீ விபத்து: கண்ணீரில் தத்தளிக்கும் கேரள மாநிலம்
- கேரளாவை சேர்ந்த 24 பேர் மற்றும் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.
- தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானதால் ஒட்டு மொத்த கேரளமும் சோகத்தில் ஆழந்து உள்ளது.
திருவனந்தபுரம்:
குவைத் நாட்டின் மங்காப் நகரில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் 45 பேர் இந்தியர்கள். இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் மற்றும் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.
அதன்பிறகு தனித்தனி வாகனங்கள் மூலம் அனைத்து உடல்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ்கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பணிகள் நடந்தன. தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானதால் ஒட்டு மொத்த கேரளமும் சோகத்தில் ஆழந்து உள்ளது.
பலியானவர்களின் உடல்கள் வீடுகளுக்கு வந்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பலியானவர்கள் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்றவர்கள் தன்னுயிர் நீத்திருப்பதை கூறி அவர்கள் கதறி அழுதது பரிதாபமான சூழலை ஏற்படுத்தியது. நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் 12 பேரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், இன்று 11 பேரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.