8 எம்.எல்.ஏ.க்கள் விலகல்: டெல்லி தேர்தல் களத்தில் நெருக்கடியில் தவிக்கும் ஆம் ஆத்மி
- ஆம் ஆத்மியை மீண்டும் கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
- டெல்லி மக்கள் அதிக அளவில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி:
டெல்லி தேர்தல் வாக்கு பதிவு 5-ந்தேதி நடக்கிறது. இதனால் இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. இதேபோல் அரசியல் களமும் நாளும் ஒரு பரபரப்பை கண்டு வருகிறது.
ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.க.வின் தேர்தல் வியூகம் புதுப்புது கோணங்களை உருவாக்குகிறது. இதனால் ஆம் ஆத்மி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆம் ஆத்மியில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 8 பேர் நேற்று முன்தினம் அந்த கட்சியில் இருந்து விலகி அடுத்ததாக பா.ஜ.க.வில் இணைந்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தது டெல்லி அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆம் ஆத்மியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதில் இருந்து ஆம் ஆத்மி மீண்டு வருவதற்குள் பட்ஜெட் சலுகையும் டெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதுபோல் அமைந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ஆம் ஆத்மியை மீண்டும் கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு டெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
டெல்லியில் வசிக்கும் குடும்பங்களில் 67 சதவீத குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களாக இருக்கின்றன. மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்க குடும்பத்துக்கு சாதகமாக பட்ஜெட் அமைந்து இருக்கிறது.
இதனால் டெல்லி மக்கள் அதிக அளவில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இது ஆம் ஆத்மிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 8 எம்.எல்.ஏ.க்கள் விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த நெருக்கடிகளால் தவித்து வரும் அந்த கட்சி, வருமான வரி வரம்பு உயர்வு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வந்து சேர்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.