பட்ஜெட் 2025-26: வருமான வரி விலக்கு யாருக்கெல்லாம் பொருந்தும்...?
- பணத்தை வைத்து பணம் ஈட்டி வருமானம் ஈட்டுவோருக்கு இந்த வரிச்சலுகை கிடையாது.
- பழைய வரி விதிப்புமுறைப்படி கணக்கிட்டாலும் ரூ.60 ஆயிரத்துக்கு மேலே வரி செலுத்த வேண்டியுள்ளது.
புதுடெல்லி:
ஏழைகளுக்கு இலவச அரிசி, மாதம் மாதம் ஊக்கத்தொகை, மானிய திட்டங்கள் என அரசாங்கத்தால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதேபோல் பணக்காரர்கள் தொழில் செய்ய பல சலுகைகள் தரப்படுகின்றன.
ஆனால் நடுத்தர வர்க்கத்தினரை பொதுவாக அரசுகள் கவனிப்பதே இல்லை. முதல்முறையாக அவர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி தந்துள்ளது மத்திய அரசு. வருமான வரி வரம்பை 12 லட்சம் ஆக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது.
இதன்படி நிலையான வரிக்கழிவு 75 லட்சம் உள்ளதால் 12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.
மியூட்சுவல் பண்ட் மற்றும் பங்குகள் வாங்கி விற்று லாபம் ஈட்டியுள்ளீர்கள் என்றால், வீடு வாங்கி விற்று லாபம் ஈட்டியுள்ளீர்கள் என்றால், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டி இருந்தால் அவர்களுக்கு பொருந்தாது.
மாதச்சம்பளம் வாங்குவோர், அதாவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று மாதத்திற்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு, அதாவது ஆண்டுக்கு 12.75 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி கிடையாது. அதேபோல் தனியாக தொழில் தொடங்கி தொழில் மூலம் வருமானம் ஈட்டினாலும் ஆண்டுக்கு 12.75 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு வரி கிடையாது.
ஆனால் பணத்தை வைத்து பணம் ஈட்டி வருமானம் ஈட்டுவோருக்கு இந்த வரிச்சலுகை கிடையாது. அதாவது பங்கு, பத்திரம் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற ஒரு சொத்தை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டினால் அவர்கள் வரி கட்ட வேண்டும்.
அதே நேரத்தில் ஆண்டு வருமானத்தில் மிகச்சிறிய அளவுக்கு கூடுதல் வருமானம் இருந்தால்கூட குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
உதாரணமாக மாத ஊதியம் பெறும் ஒருவரது ஊதியம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 250-க்கு மேல் ரூ.1 அதிகரித்தால்கூட அவரது ஆண்டு வருமானம் ரூ.12¾ லட்சத்துக்கு மேலே சென்று விடுகிறது. நிலைக்கழிவு ரூ.75 ஆயிரம் போக, அவரது ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருந்தால் மட்டுமே முழுமையான வரி விலக்கு பெற முடியும். அதற்கு மேலே ஒரு ரூபாய் கூடுதல் வருமானம் பெற்றாலும், புதிய வரி விகிதங்கள் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும்.
அதன்படி, வருமானத்தின் முதல் ரூ.4 லட்சத்துக்கு வரி இல்லை. அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 5 சதவீதம் அடிப்படையில் ரூ.20 ஆயிரம், அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 10 சதவீதம் அடிப்படையில் ரூ.40 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் வரியாக செலுத்த வேண்டும்.
பழைய வரி விதிப்புமுறைப்படி கணக்கிட்டாலும் ரூ.60 ஆயிரத்துக்கு மேலே வரி செலுத்த வேண்டியுள்ளது. பழைய முறைப்படி முதல் ரூ.2½ லட்சத்துக்கு வரி எதுவுமில்லை.
அடுத்த ரூ.2½ லட்சத்துக்கு 5 சதவீதம், அடுத்த ரூ.5 லட்சத்துக்கு 20 சதவீதம், அதற்கு மேல் 30 சதவீதம் என வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அப்படிப் பார்த்தால் ரூ.12 லட்சத்துக்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் வருமானம் பெறும் ஒருவர், வீட்டுக் கடன், கல்விக் கடன், சேமிப்பு, மருத்துவச் செலவு என வரிவிலக்கு பெறத் தகுதியுள்ள பல்வேறு இனங்களில் கணக்கிட்டு, ரூ.4லட்சத்து 62 ஆயிரத்து 500 அளவுக்கு கழிவு பெறுபவர்களால் மீதமுள்ள வருமானம் ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 500-க்கு ரூ.60 ஆயிரம் வரி செலுத்தலாம்.
இந்த அளவுக்கு கழிவு பெற முடியாதவர்களால் புதிய முறையைவிட, பழைய வரிவிதிப்பு முறையில் மிக அதிகமான வரி செலுத்த வேண்டியிருக்கும். எனவே, மிகப்பெரும்பாலானோர் புதிய முறையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரூ.12.75 லட்சத்துக்குமேல் கூடுதலாக ஒரு ரூபாய் அதிக வருமானம் இருந்தால்கூட குறைந்தபட்சம் ரூ.60ஆயிரம் வரி செலுத்தவேண்டியது கட்டாயம் என்று கூறப்படுகிறது.