இந்தியா

பட்ஜெட் 2025-26: அமைச்சர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.1024 கோடி ஒதுக்கீடு

Published On 2025-02-02 08:46 IST   |   Update On 2025-02-02 08:46:00 IST
  • பட்ஜெட்டில் பெரும்பாலான மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
  • பட்ஜெட் பீகார் மாநிலத்துக்காகவே தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பட்ஜெட் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனை தொடர்ந்து நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 8 பட்ஜெட்டுகளில் நேற்று தாக்கல் செய்யப்பட்டதே குறைவான நேரத்தில் வாசிக்கப்பட்ட பட்ஜெட் என கூறப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டை சரியாக காலை 11 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கிய நிர்மலா சீதாராமன் பிற்பகல் 12.17 மணிக்கு உரையை நிறைவு செய்தார். இதனால் சுமார் 1 மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.

இதனிடையே, மத்திய பட்ஜெட்டில் பெரும்பாலான மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பட்ஜெட் பீகார் மாநிலத்துக்காகவே தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் குழு, அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம், அரசு விருந்தினர்களின் உபசரிப்பு, முன்னாள் கவர்னர்களின் ஓய்வூதியம் போன்ற செலவினங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.1,024.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்களின் ஓய்வூதியம், இதர படிகள், போக்குவரத்து செலவுகளுக்கு ரூ.619.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு செயலகத்தின் நிர்வாக செலவுகள் மற்றும் விண்வெளி திட்ட செலவுகளுக்காக ரூ.182.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக செலவுகளுக்காக ரூ.70.91 கோடியும், அரசு விருந்தினர்களின் உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்குகளுக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அளவான ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News