அசாமில் அதிரடி வாகன சோதனை: ரூ.210 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
- போலீசார் சில்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாஹித்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
- போதை இல்லாத அசாமை நோக்கிய பயணத்தில் ஒரு பெரியபடியாக இந்த நடவடிக்கை உள்ளது
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சில்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாஹித்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில், 21 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.210 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த லால்தினுவா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், அசாமில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை இல்லாத அசாமை நோக்கிய பயணத்தில் ஒரு பெரியபடியாக இந்த நடவடிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.