பைக் டாக்சி சேவைக்கு தடை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அரசு உத்தரவு
- பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
- பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.
பெங்களூரு:
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஓலா, ஊபர், ரேபிடோ என்ற பெயரில் பைக் டாக்சிகள் கர்நாடகாவில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கு வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக குற்றம் சாட்டினர்.
பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு போக்குவரத்து துறை கர்நாடகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்ட உத்தரவில் பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்த உத்தரவை ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், பெண்கள் வரவேற்றுள்ளனர்.