தொடர்மழையால் தேங்கிய வெள்ளம்- பெங்களூருவில் 2 கி.மீ., தூரத்தை கடக்க 2.30 மணி நேரம்! வாகன ஓட்டிகள் அவதி
- ஓசூர் ரோடு, எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.
பெங்களூரு:
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நகரில் எங்கு பார்த்தாலும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா, மடிவாளா, ஓசூர் ரோடு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஓசூர் ரோடு, எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூரு மாநகரில் தொடர்ந்து போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம், இணைப்பு சாலைகளில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. 2 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2.30 மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடுமையாக தவித்தனர்.
இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் வாகனங்களை சாலையில் விட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர். இந்த காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதில் பெங்களூருவில் போக்குவரத்து அவலத்தை பாருங்கள் என்று கூறியுள்ள அவர்கள், போலீசார் இதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.