பீகாரில் ஆசிரியர் பணி விண்ணப்பதாரர் மீது கொடூர தாக்குதல்- விசாரணை நடத்த அரசு உத்தரவு
- போராட்டக்காரர்கள் கலைக்க தடியடி நடத்திய போலீசார்.
- மாவட்ட நிர்வாக அதிகாரி மீது விசாரணை நடத்த துணை முதல்வர் உத்தரவு.
பீகார் தலைநகர் பாட்னாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பத்திருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதுடன், தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அப்போது போராட்டக்காரர் ஒருவர் மீது மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி லத்தியால் கொடூரமாக தாக்கினார். இதுகுறித்த வீடியோ சமூக வளைதலங்களில் பரவியது.
தரையில் உருண்டு புரளும் அந்த போராட்டக்காரர் தனது தலையில் தேசிய கொடியை சுற்றியிருப்பது குறித்து புகைப்படங்களும் பகிரப்பட்டன. இதையடுத்து தாக்குதல் நடத்திய அதிகாரி மீது விசாரணை நடத்த குழு ஒன்றை நியமித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி போராட்டக்காரர்கள் மீது ஏன் தடியடி நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.