ஆபரேஷன் தாமரை-கட்சி மாற ரூ.15 கோடி பேரம் பேசிய பா.ஜ.க: ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு
- ஆம் ஆத்மி வேட்பாளர்களுடன் பா.ஜ.க. சார்பில் இருந்து தொலைபேசியில் பேசினர்.
- எங்களின் 7 வேட்பாளர்களுக்கு கட்சி மாற 15 கோடி ரூபாய் பேரம் பேசியது என்றார்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் 7 வேட்பாளர்களுடன் பா.ஜ.க. சார்பில் இருந்து தொலைபேசியில் பேசியுள்ளனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் பா.ஜ.க.வில் சேர தலா 15 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். சில வேட்பாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
தேர்தல் முடிவுக்கு முன் பா.ஜ.க. தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதை இது தெளிவாகக் காட்டுகிறது. அதனால்தான் இது போன்ற ஒன்றை முயற்சிக்கிறது.
அத்தகைய அழைப்புகளைப் பதிவு செய்யவும், நேரில் சந்திக்கும் சந்திப்புகளை ஆவணப்படுத்த உளவு கேமராக்களை பயன்படுத்துமாறு எங்கள் வேட்பாளர்களை அறிவுறுத்தியுள்ளோம்.
பிப்ரவரி 8-ம் தேதி வரை காத்திருங்கள், ஆம் ஆத்மி கட்சி தீர்க்கமான பெரும்பான்மையுடன் அரசு அமைக்கும்.
கல்வி, மின்சாரம், தண்ணீர், சுகாதாரம் ஆகிய பிரச்சனைகளில் ஆம் ஆத்மி எடுத்த நிர்வாக முடிவுகளை மக்கள் ஆதரித்துள்ளனர்.
எங்கள் வாக்குறுதிகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகளில் அவை நிச்சயம் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.