போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த தொழிலதிபர்
- ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட நிகில் குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
- கடுங்குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
சிம்லா:
ராஜஸ்தான் மாநிலம் பார்மரை சேர்ந்தவர் நிகில் குமார் (வயது 28). ஜவுளிக்கடை அதிபர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் இமாசல பிரதேசம் மாநிலம் குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார்.
மணாலியில் உள்ள பனிமலையில் தனது நண்பர்களுடன் ஏறி உற்சாக சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு 'ஐஸ்'கட்டியாக உறைந்து இருந்த சந்திரா ஆற்றங்கரையில் நின்று போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தார். இதனிடையே நிகில் குமாரின் பாரத்தை தாங்காமல் ஐஸ்கட்டி நொறுங்கி உடைந்தது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தில் நண்பர்கள் கண் எதிரே நிகில் குமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட நிகில் குமாரை தீவிரமாக தேடி வந்தனர். கடுங்குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தவறி விழுந்த இடத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் ஆற்றில் நிகில் குமார் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஒரு புகைப்படத்திற்காக தனது உயிரையே விலையாக கொடுத்த நிகில் குமாரின் 'இறுதி' போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.