இந்தியா
அவர் எங்களுடைய பாதுகாவலர்: ஓம் பிர்லா அவை நடவடிக்கையை மீண்டும் தொடங்க வேண்டும்- காங். எம்.பி.

அவர் எங்களுடைய பாதுகாவலர்: ஓம் பிர்லா அவை நடவடிக்கையை மீண்டும் தொடங்க வேண்டும்- காங். எம்.பி.

Published On 2023-08-03 12:03 IST   |   Update On 2023-08-03 12:03:00 IST
  • எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்வதாக அதிருப்தி
  • நேற்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது.

இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர் இருக்கைக்கு வரவில்லை. ராஜேந்திர அகர்வால் தலைமை தாங்கினார். அப்போது காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ''அவை நடவடிக்கைகளை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவர் எங்களுடைய பாதுகாவலர்'' என்றார்.

உடனே, இன்று அவைத்தலைவராக இருக்கும் ராஜேந்திர அகர்வால், ''இந்த தகவலை அவருக்கு தெரிவிக்கிறேன்'' என்றார்.

முன்னதாக,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு மக்களவையில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார்.

குறிப்பாக நேற்றுமுன்தினம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News