தன்னை தானே கடத்திய இளைஞர்.. எழுத்துப்பிழையால் அம்பலமான நாடகம்
- மிரட்டல் செய்தியில் 'DEATH' என்று எழுவதற்கு பதிலாக 'DETH' என்று எழுதியிருந்த்தை போலீசார் கவனித்துள்ளனர்.
- தனது தம்பி சந்தீப் கடத்தப்பட்டதாக சஞ்சய் குமார் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
உத்தரபிரதேசத்தில் ஜனவரி 5 ஆம் தேதி சஞ்சய் குமார் என்ற நபர் தனது தம்பி சந்தீப் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், "தனது மொபைல் போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஒரு வீடியோ வந்தது. அதில் எனது தம்பியை கயிறால் கட்டி வைத்துள்ளனர். தனது சகோதரன் உயிருடன் கிடைக்க வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தரவேண்டும் என்று அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது" என்று சஞ்சய் குமார் தெரிவித்தார்.
மொபைல் போனுக்கு வந்த மிரட்டல் செய்தியில் 'DEATH' என்று எழுவதற்கு பதிலாக 'DETH' என்று எழுதியிருந்ததை போலீசார் கவனித்துள்ளனர். ஆகவே படிப்பறிவு இல்லாத நபர் தான் அவரை கடத்தியுள்ளார் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் சந்தீப்பை ரூபாபூர் அருகே கண்டுபிடித்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் சந்தேகமடைந்த போலீசார் சந்தீப்பிடம் கடத்தல் தொடர்பாக ஒரு கடிதம் எழுத சொல்லியுள்ளனர். அதில், 'DEATH' என்று எழுவதற்கு பதிலாக 'DETH' என்று சந்தீப் எழுதியுள்ளார்.
இதனையடுத்து சந்தீப்பிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தன்னை தானே கடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
முதியவர் ஒருவர் மீது சந்தீப் பைக்கில் சென்றபோது மோதியுள்ளார். அவரின் மருத்துவ செலவுக்காக ரூ.80,000 தேவைப்பட்டதால் தனது பைக்கை சந்தீப் விற்றுள்ளார். மேலும் பணம் தேவைப்படவே கடத்தல் நாடகத்தை சந்தீப் நடத்தியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.