இந்தியா

நாட்டிலேயே யாரேனும் மோசடி மன்னர் என்றால் அது கெஜ்ரிவால்தான்: வெள்ளை அறிக்கை வெளியிட்டு காங்கிரஸ் சாடல்

Published On 2024-12-25 11:41 GMT   |   Update On 2024-12-25 11:41 GMT
  • ஜன்லோக்பால் மூலமாக ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி அதை தற்போது மறந்துவிட்டது.
  • டெல்லியை லண்டன் போல் ஆக்குவதாக தெரிவித்தார்கள். தற்போது நம்பர் ஒன் மாசு நகரமாக உள்ளது.

டெல்லி மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி தெரிவித்துவிட்டது.

இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. இடையில் மும்முனை போட்டி என்பது உறுதியாகிவிட்டது. ஆம் ஆத்மி 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் 2100 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது ஆம் ஆத்மி அரசு மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக காற்று மாசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட 12 பாயிண்ட்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொருளாளர் அஜய் மக்கான் கெஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அஜய் மக்கள் கூறியதாவது:-

டெல்லி முன்னாள் முதல்வரை ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் அது "Farziwal" ஆகத்தான் இருக்கும். நாட்டிலேயே யாரேனும் மோசடி கிங் என்றிருந்தால் அது கெஜ்ரிவால்தான். இதனால்தான் கெஜ்ரிவால் அரசுக்கும் (டெல்லி மாநில அரசு), பா.ஜ.க.வுக்கும் எதிராக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

ஜன்லோக்பால் என்பதை கையில் எடுத்துக்கொண்டு ஆம் ஆத்மி ஆட்சியை கொண்டு வந்தது. ஆனால் அதை ஏன் நடைமுறை படுத்தவில்லை.

டெல்லியில் துணைநிலை ஆளுநர் அனுமதிக்கவில்லை என்றால், பஞ்சாப் மாநிலத்தில் கொண்டு வர வேண்டியதுதானே. உங்களை தடுப்பது யார்?. அங்கு முழு மெஜாரிட்டி அரசாகத்தானே உள்ளீர்கள். பின்னர் ஏன் அங்கு கொண்டு வரவில்லை?. இது வெறும் சாக்குபோக்கு. 10 வருடத்திற்கு முன்னதாக ஜன்லோக்பால் மூலமாக ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. தற்போது அதை மறந்து விட்டது.

டெல்லியை லண்டன் போல் ஆக்குவதாக கூறினார்கள். டெல்லியை நம்பர் ஒன் மாசு நகரமாக உருவாக்கியுள்ளனர்.

2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை 40 நாட்கள் ஆதரித்ததால்தான் இன்று டெல்லி இந்த அவலநிலையை அடைந்துள்ளது. காங்கிரஸ் இங்கு பலவீனமடைந்துள்ளதாகவும் நினைக்கிறேன். அதை சரிசெய்ய வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News