குடியரசு தினவிழாவில் பங்கேற்க அதிபர் மேக்ரான் ஜனவரி 26ல் இந்தியா வருகை
- குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.
- கடந்த ஆண்டு நடந்த குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் அல் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின விழா நடைபெறும். டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றுவார். நாட்டின் கலாசாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்புகள் நடைபெறும்.
இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம்.
இதற்கிடையே, குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என எல்சி பிரான்ஸ் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் அல் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.