இந்தியா

மோதல் நடந்த மண்டபமும், அங்கிருந்து சிதறி ஓடும் உறவினர்களையும் படத்தில் காணலாம்.

திருமண விருந்தில் மாப்பிள்ளை தோழர்களுக்கு அப்பளம் கொடுக்காததால் பயங்கர கோஷ்டி மோதல்

Published On 2022-08-30 04:21 GMT   |   Update On 2022-08-30 04:21 GMT
  • பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை.
  • மாப்பிள்ளை தோழர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர்.

திருவனந்தபுரம்:

திருமண வீடுகளில் மாப்பிள்ளை வீட்டாருக்கு தனி கெத்து இருக்கும். வரவேற்பு உள்பட விருந்து நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு தான் முதல் மரியாதையும் வழங்கப்படும். இதில் ஏதாவது குறை இருந்தால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூளும்.

தமிழ் சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம். கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் விபரம் வருமாறு:-

ஹரிப்பாடு முட்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து மண்டபத்தில் விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாப்பிள்ளையின் தோழர்களுக்கே அப்பளம் இல்லையா? என்று மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கே திரள, விருந்து நடந்த மண்டபம் களேபரமானது. அப்போது மாப்பிள்ளை தோழர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர்.

இதில் பிரச்சினை பெரிதாக அங்க கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மாறிமாறி இரு தரப்பினரும் மோதி கொள்ள மண்டப ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு மண்டபத்தில் இருந்த உறவினர்கள் சிதறி ஓடினர்.

தகவல் அறிந்து அப்பகுதி போலீசார் மண்டபத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

இந்த சம்பவத்தை திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி பரவி வருகிறது.

Tags:    

Similar News