இந்தியா

போஸ்ட் மார்ட்டம்.. Freezer இல் 4 மணி நேரம்.. எரியூட்டும்போது உயிருடன் எழுந்து வந்த நபர் - அதிர்ச்சி

Published On 2024-11-22 11:40 GMT   |   Update On 2024-11-22 11:40 GMT
  • Freezer-இல் அவரது உடல் 4 மணி நேரமாக வைக்கப்பட்டுள்ளது
  • ரோகித்தேஷ் உடலில் திடீரென அசைவுகள் தெரிந்ததால் உடன் இருந்தவர்கள் திடுக்கிட்டனர்

ராஜஸ்தானில் இறந்துவிட்டதாகக் கருதி எரியூட்டும் மேடையில் கிடத்தப்பட்ட நபர் உயிருடன் எழுந்து வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் என்ஜிஓ நடத்தும் மா சேவா சன்ஸ்தான் என்ற பராமரிப்பு இல்லத்திலிருந்த மன நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரான ரோகித்தேஷ் என்பர் கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக பகவான் தாஸ் கேதன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுயநினைவை இழந்து காணப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் உயிரிழந்து விட்டதாக அன்றைய தினமே மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அவரது உடலுக்கு யாரும் பொறுப்பேற்க வராததால் மருத்துவர்கள் அவருக்கு பிரேத பரிசோதனை செய்யாமலேயே போஸ்ட் மார்ட்டம் சான்றிதழைத் தயாரித்து உடலை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிணவறை குளிர்சாத Freezer-இல் அவரது உடல் 4 மணி நேரமாக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் உடலை எரியூட்டுவதற்காக போலீசார் ஆம்புலன்சில் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மேடை மீது கிடத்தப்பட்ட ரோகித்தேஷ் உடலில் திடீரென அசைவுகள் தெரிந்ததால் உடன் இருந்தவர்கள் திடுக்கிட்டனர்.

உடனே அவர் ஆம்புலன்சில் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் வரை சென்ற நிலையில் இதுதொடர்பாக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ரோகித்தேஷ் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள் மூவரை மாவட்ட ஆட்சியர் ராமாவதார் மீனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு அவர் உத்தரவிட்டார். ரோகித்தேஷ் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News