இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலை விட அதிஷி 1000 மடங்கு சிறந்தவர் - டெல்லி ஆளுநர்

Published On 2024-11-22 15:32 GMT   |   Update On 2024-11-22 16:32 GMT
  • ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்
  • கைலாஷ் கெலாட் பதவி விலகி பாஜகவில் இணைந்தார்

ஆம் ஆத்மியை சேர்ந்த டெல்லி முதல்வர் அதிஷி கெஜ்ரிவாலை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்ற டெல்லி பெண்களுக்கான இந்திரா காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (IGDTUW) 7வது பட்டமளிப்பு விழாவில் டெல்லி துணை ஆளுநர் வினய் குமார் சக்சேனா மற்றும் முதல்வர் அதிஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் , "டெல்லியின் முதல்வர் ஒரு பெண் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர் தனது முன்னோடியை விட [கெஜ்ரிவாலை விட] ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என்றார்.பட்டமளிப்பு விழாவில் இதை பேசும்போது, மேடையில் இருந்த அதிஷியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாணவர்களிடம் பேசினார்.

 

சக்சேனா தனது உரையில் மாணவர்களிடம், "நீங்கள் முன்னேறும்போது, உங்களுக்கு நான்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள் உள்ளன. முதலில் உங்களை மீதான உங்கள் பொறுப்பு, இரண்டாவது உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கான உங்கள் பொறுப்பு, மூன்றாவது சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் பொறுப்பு.பாலினம் என்ற கண்ணாடி உச்சவரம்பை உடைத்து, அனைத்துத் துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக நிற்கும் பெண்களாக உங்களை நிரூபிப்பது நான்காவது பொறுப்பு" என்று அவர் கூறினார்.

முன்னதாக கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த கெஜ்ரிவால், செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் அதிஷியின் பெயரை முதல்வராக முன்மொழிந்தார்.

இந்த முடிவு ஒருமனதாக ஏற்பட்டு அதிஷி முதல்வராகத் தேர்வாகினார். தேர்தலில் மக்கள் ஏற்றுக்கொண்ட பின்னரே மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அதன்படி அடுத்த வருட தொடக்கத்தில் டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மி மூத்த தலைவரும் அமைச்சருமான கைலாஷ் கெலாட் பதவி விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News