5 நாள் சுற்றுப்பயணத்தில் உலக தலைவர்களுடன் 31 பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி
- முதல் கட்டமாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.
- நைஜீரிய பயணத்தை முடித்துக்கொண்டு அவர் பிரேசில் சென்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.
முதல் கட்டமாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் சென்ற அவர், அங்கு நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து கயானா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய தேசிய விருதான, தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ் விருது வழங்கப்பட்டது.
இந்தச் சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ஜி20 மாநாட்டை முன்னிட்டு பிரேசிலில் நடைபெற்ற 10 இருதரப்பு பேச்சுவார்த்தைகள், தொடர்ந்து கயானாவில் நடைபெற்ற 9 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றில் மோடி பங்கேற்றார்.
பிரேசிலில் இந்தோனேசியா, போர்ச்சுக்கல், இத்தாலி, நார்வே, பிரான்ஸ், இங்கிலாந்து, சிலி, அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
கயானாவில் டொமினிகா, பகாமாஸ், டிரினிடாட்&டுபாகோ, சுரிநாம், பார்படாஸ், ஆன்டிகுவா-பார்படா, கிரெனெடா மற்றும் செயிண்ட் லூசியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதவிர, முறைசாரா சந்திப்புகள் வாயிலாக சிங்கப்பூர், தென் கொரியா, எகிப்து, அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றியம், உலக வர்த்தக மையம், உலக சுகாதார மையம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.