அரியானாவில் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை
- குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
- அதில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது என்றார்.
சண்டிகர்:
அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைவதற்குள் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமத்துவமான முறையில் வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் நாட்டில் பொய்யையும், அராஜகத்தையும் பரப்பும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. பொய்களைப் பேசுவதில் அவர்களுக்கு அவமானம் இல்லை.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாசல பிரதேசத்தில் யாரும் இன்று மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில், அங்கு மாநில அரசு பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை நிர்வகிக்க தவறிவிட்டது.
அரியானாவின் முதல் மந்திரி நயாப் சிங் சயினி மாநிலத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முதலீடுகள் மற்றும் வருவாய் அடிப்படையில் அரியானா முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
மத்தியில் 3-வது முறை ஆட்சி செய்வதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினார்கள். அதேபோல் அரியானாவிலும் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் என தெரிவித்தார்.