இந்தியா

பெங்களூரு சாலையில் ஆறாக ஓடிய மழை வெள்ளம்

பெங்களூருவில் விடிய விடிய கனமழை: சாலையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-11-07 05:33 GMT   |   Update On 2023-11-07 07:30 GMT
  • ஸ்ரீராம்பூர் மற்றும் லிங்கர்ஜ்புரா சுரங்க பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • கனமழை காரணமாக கர்நாடக துணை முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூரு நகரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்து ஆய்வு செய்தார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மல்லேஸ்வரம், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 7 மணி முதல் அது கனமழையாக கொட்ட ஆரம்பித்தது. தொடர்ந்து விடிய விடிய பெங்களூரு நகர் முழுவதும் பலத்த மழை கொட்டியது.

பலத்த மழை காரணமாக பெங்களூரு சதக்கார் நகர், மல்லேஸ்வரம், சாந்தி நகர், மைசூரு வங்கி பகுதி மற்றும் டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. வீடுகளில் புகுந்த மழை வெள்ளத்தை பொதுமக்கள் விடியவிடிய கடும் குளிரிலும் அகற்றினர். இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீராம்பூர் மற்றும் லிங்கர்ஜ்புரா சுரங்க பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றது. குறிப்பாக மண்யதா தொழில்நுட்ப பூங்கா செல்லும் சாலை, ஓ,ஆர்.ஆர். சாலை, வித்யா ஷில்பா அண்டர்பாஸ் சர்வீஸ் சாலை ஆகிய இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 

பெங்களூரு நகரில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கர்நாடக துணை முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூரு நகரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்து ஆய்வு செய்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வெள்ளசேத விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News