இந்தியா (National)

பெங்களூருவில் கொட்டிய கன மழை: 12 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

Published On 2024-10-23 05:10 GMT   |   Update On 2024-10-23 05:10 GMT
  • மழையின் காரணமாக சுமார் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
  • தேசிய பேரிடர் மீட்பு படையினர் மக்களை படகுகள் மூலம் மீட்டனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களுரு நகரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பெங்களூரு மாநகரமே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.

இந்த மழையின் காரணமாக சுமார் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்பு குழுவினர் ரப்பர் படகு, டிராக்டர்கள் மூலம் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்கவைத்து உள்ளனர்.

கோகிலு சர்க்கிள் என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து பார்க்கிங் பகுதியில் 5 அடி தண்ணீர் தேங்கி வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

இதையடுத்து அங்கு வசித்த பொதுமக்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். பெரும்பாலானவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் கோகிஷ கிராசை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் யலஹங்கா-மாருதி நகர் பிரதான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாருதி நகரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. பெங்களூரு மாநகரின் பல்வேறு இடங்களில் வீடுகளில் சுமார் 2 அடிக்கும், சாலைகளில் சுமார் 3 அடிக்கும் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிட்டது.

முக்கிய சாலைகள் அனைத்தும் மழை வெள்ளத்தால் ஆறு போல் மாறியது. தொடர்ந்து மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

பெங்களூரு கேந்திரியா விகார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை வெள்ளம் சூழ்ந்தது. அந்த கட்டிடத்தின் தரைத்தள பகுதியில் 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால் அந்த கட்டிடத்தில் இருந்த மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 16 ரப்பர் படகுகளை கொண்டு வந்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து மக்களை படகுகள் மூலம் வெளியேற்றும் பணியை மேற்கொண்டனர்.

அந்த குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பிஸ்கட், தண்ணீர், உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பெங்களூரு நகரில் இந்த மாதம் வழக்கத்தை விட இரண்டு மடங்கு பெய்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்யும் என்று பெலகாவி, தார்வாட், உடுப்பி, சித்ர துர்கா, தும்கூர், ஹாசன், குடகு, மாண்டியா, மைசூரு உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாக அங்குள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் நீர்நிலை களில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

துங்கபத்ரா அணையில் இருந்து 1லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் துங்க பத்ரா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பெங்களூரு பாபுஷா பாளையத்தில் கட்டப்பட்டு வந்த 6 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 6 பேர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் நேற்று இரவு இறந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் உயிரிழ்ந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News