பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கிய கொடூரம்.. மணிப்பூரில் வெடித்த போராட்டம்
- இணையதள முடக்கம் காரணமாக மக்களில் பெரும் பகுதியினர் வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
- குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் மணிப்பூரில் பரவிய வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வீடியோவின் தாக்கம் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இன்று தீவிரமாக வெடித்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். வீதி வீதியாக மக்கள் அணிவகுத்துச் சென்று இந்த சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர்.