கோடி ரூபாய்க்கு சங்கேத குறியீடு 'நெய்': கெஜ்ரிவால் பயன்படுத்தியதாக சுகேஷ் சந்திரசேகர் தகவல்
- கெஜ்ரிவாலுடன் நடத்திய 700 பக்க ‘வாட்ஸ்-அப்’ அரட்டைகள் ஆதாரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- ‘நார்கோ’ சோதனைக்கு உட்படவும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
டெல்லி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை தனது வக்கீலிடம் கொடுத்த கடிதம் மூலம் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இந்த முறை சுகேஷ் மதுபான ஊழல் வழக்கை தொடர்புபடுத்தி இருக்கிறார்.
அரவிந்த் கெஜ்ரிவாலும், சுகாதார மந்திரியாக இருந்த சத்யேந்தர் ஜெயினும் தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரபல கட்சிக்கு தன்னை ரூ.75 கோடி கொடுக்கச் சொன்னதாகவும், தான் தனது ஆட்கள் மூலம் ரூ.15 கோடி கொடுத்ததாகவும் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக கெஜ்ரிவாலுடன் நடத்திய 700 பக்க 'வாட்ஸ்-அப்' அரட்டைகள் தன்னிடம் ஆதாரமாக இருப்பதாக தெரிவித்துள்ள சுகேஷ், உண்மையை கண்டறியும் 'நார்கோ' சோதனைக்கு உட்படவும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தென்மாநில கட்சித்தலைவருக்கு அளித்த ரூ.15 கோடி குறித்து கெஜ்ரிவாலும், சத்யேந்தர் ஜெயினும் குறிப்பிடும்போது 15 கிலோ நெய்யை கொடுக்குமாறு தெரிவித்ததாக கூறியுள்ளார். 'நெய்' என்றால் கோடி ரூபாய் என அர்த்தம் தரும் சங்கேத குறியீடு எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
சுகேஷ் சந்திரசேகரின் இந்த புதிய தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.