நரமாமிசத்தை ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்தேன்- மந்திரவாதி அதிர்ச்சி தகவல்
- முகமது ஷபி கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் சுமார் 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
- ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரில் தமிழக பெண் பத்மா, எர்ணாகுளம் பெண் ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர்.
இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த முகமது ஷபி கைது செய்யப்பட்டார். மந்திரவாதியான இவருடன் தொடர்பில் இருந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பகவல் சிங்குடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட முகமது ஷபி, அவரை செல்வந்தர் ஆக்குவேன் எனக்கூறியே பெண்களை கடத்தி நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
நரபலி கொடுத்த பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி அவற்றை சமைத்து சாப்பிட்டதுடன், மீதி இருக்கும் மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாப்பாக வைக்கவும் கூறியுள்ளார்.
முகமது ஷபி கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் சுமார் 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
பகவல் சிங் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து நரமாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நரமாமிசத்தை பதுக்கி வைத்தது ஏன்? என்று கேட்டபோது, அதனை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று முகமது ஷபி கூறியதாக கைதான லைலா போலீசாரிடம் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறினார். அந்த பெண்ணின் மாமிசத்தை ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறினார்.
பெங்களூருவில் இருந்து வந்த மந்திரவாதிகள் அதனை வாங்கி சென்றதாகவும் தெரிவித்தார். இதனை நம்பித்தான் நாங்கள் வீட்டில் நரமாமிசத்தை பாதுகாப்பாக வைத்தோம், என்றார்.
இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் கூறும்போது, நரமாமிசம் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. பகவல் சிங், லைலாவை ஏமாற்றவே முகமது ஷபி இப்படி கூறியுள்ளார்.
என்றாலும் நாங்கள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களையே சேகரித்து வருகிறோம். இதில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விரைவில் அதனை கோர்ட்டில் சமர்ப்பிப்போம், என்றார்.