ஜங்கிள் சஃபாரிக்குள் புகுந்து மானை வேட்டையாடிய சிறுத்தை.. அதிர்ச்சியிலேயே மரணித்த மற்ற 7 மான்கள்
- 2-3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் ஒற்றுமை சிலைக்கு அருகில் உள்ள கெவாடியா வனப் பகுதிக்குள் நுழைந்தது
- சிறுத்தை திடீரென அடைப்புக்குள் நுழைந்ததில் மான்கள் பீதியடைந்தன
குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை அமைந்துள்ளது. அதை சுற்றி உள்ள ஜங்கிள் சபாரி பகுதிக்குள் கடந்த புத்தாண்டு தினத்தன்று சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.
அந்த சிறுத்தை பிளாக்பக் எனப்படும் கரும்புலி வகை மான் ஒன்றை வேட்டையாடி கொன்றுள்ளது. ஒரு பிளாக்பக் மான் இறந்த அதிர்ச்சியிலேயே மற்ற 7 மான்களும் இறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
2-3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் ஒற்றுமை சிலைக்கு அருகில் உள்ள கெவாடியா வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலய ஜங்கிள் சஃபாரி பூங்காவின் வேலியிடப்பட்ட எல்லைகளைத் தாண்டி வந்துள்ளது. அங்கு பிளக்பக் மான்கள் இருந்த அடைப்புக்குள் நுழைந்து ஒரு மானை வேட்டையாடி உள்ளது.
வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, எட்டு சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டன.
வனத்துறை துணைப் பாதுகாவலர் (டிசிஎஃப்) அக்னீஸ்வர் வியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுத்தை திடீரென அடைப்புக்குள் நுழைந்ததில் மான்கள் பீதியடைந்தன. பணியில் இருந்த காவலர்கள் அதை விரட்ட முயற்சித்த போதிலும், சிறுத்தை ஒரு கரும்புலியைக் கொன்றது, அதே நேரம் குழப்பம் மற்றும் அதிர்ச்சி மற்ற 7 மான்களின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமை சிலை அருகே உள்ள சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலயம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது, அங்கு பல சிறுத்தைகள் உள்ளன. இருப்பினும் சஃபாரி பூங்காவிற்குள் சிறுத்தை நுழைவது இதுவே முதல் முறை.
ஜங்கிள் சஃபாரியில் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், நுழைவாயில் மற்றும் அடைப்புக்கு அருகில் உள்ள கேமராக்கள் சிறுத்தை நுழைவதை காட்டுகிறது. சிறுத்தை முழுவதுமாக ஜங்கிள் சஃபாரியை விட்டு வெளியேறிவிட்டதா என்பது இன்னும் உறுதியாக தெரியாது என்று தெரிவித்துள்ளார்.