இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

Published On 2023-03-16 09:32 GMT   |   Update On 2023-03-16 09:32 GMT
  • வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
  • திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலமும் நடைபாதையாகவும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

வனப்பகுதியில் இருந்து விலங்குகள் அடிக்கடி வழி தவறி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலை பாதைக்கு வரும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மற்றும் நடைபாதையாக செல்லும் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைப்பாதையில் பைக்கில் திருமலைக்கு சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் மற்றும் பக்தர்கள் 2 பேரை மலைப்பாதையில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது.

இதையடுத்து வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் மலை பாதைக்கு வராதவாறு தடுப்பு வேலிகள் அமைக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திருமலையில் இருந்து அலிபிரிக்கு வரும் மலைப்பாதையில் 31வது வளைவில் சிறுத்தை ஒன்று நடமாடிக்கொண்டு இருந்தது. இதனைக் கண்ட வாகனத்தில் வந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சிறுத்தை மீண்டும் வணப்பகுதிக்குள் சென்றது தெரிய வந்தது. மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனவிலங்குகள் மலைப்பாதைக்கு வராதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News