மகா கும்பமேளா பயணம்: ரெயிலில் சீட் கிடைக்காமல் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்த பக்தர் கூட்டம் - வீடியோ
- இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
- சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. எனவே பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு கிளம்பிய பக்தர்கள், ரெயில் பெட்டிகளில் இடம் கிடைக்காமல் ரெயில் என்ஜின் பெட்டிக்குள் பக்தர்கள் ஏறி அமர்ந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கான்ட் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 8) அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாரணாசியில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் ரெயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தபோது, இருக்கைகள் கிடைக்காத சில பயணிகள் ரயில் என்ஜினுக்குள் நுழைந்து கதவை உள்ளே இருந்து மூடினர். சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முக்கியமான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் இருப்பதால், என்ஜின் பெட்டியில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கினர்.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.