நீங்கள் பெங்கால், பீகார், ஒடிசாவை ஆக்கிரமிப்போம் என்பீர்கள்: நாங்கள் என்ன லாலிபாப் சாப்பிடுவோமா?- மம்தா
- இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வன்முறையை தொடங்கவில்லை.
- பெங்காலில் மோசமான நிலை உருவாகும் வகையில் எந்த வகையான கருத்துகளையும் நாம் தெரிவிக்கக் கூடாது.
வங்கதேசத்தில் மைனாரிட்டி சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஆத்திரமூட்டும் வகையிலான கருத்துகனை கூறுவதை தவிர்க்க வேண்டும். மீடியாக்களும் ஆத்திரமூட்டும் வகையிலான வீடியோக்களை வெளியிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி மேற்கு வங்க சட்டசபையில் பேசும்போது கூறியதாவது:-
இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வன்முறையை தொடங்கவில்லை. சமூக விரோதிகள் வன்முறையை தொடங்கினர். பெங்காலில் மோசமான நிலை உருவாகும் வகையில் எந்த வகையான கருத்துகளையும் நாம் தெரிவிக்கக் கூடாது. வங்கதேசத்தில் நடைபெறும் கொடுமைகளுக்கு எதிராக இந்துக்களும், முஸ்லிம்களும் இங்கே போராட்டம் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இது நம்முடைய மதசார்பற்ற தன்மையை காட்டுகிறது.
மைனாரிட்டி தலைவர்கள் பேரணி மேற்கொள்ள விரும்புகிறார்கள். அவ்வாறு பேரணி மேற்கொள்ள வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை ஏராளமானோர் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் மற்றொரு வன்முறையை தொடங்குவார்கள். நாம் வன்முறையை விரும்பவில்லை. நாம் அமைதியை விரும்புகிறோம். இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒரே இரத்தம் கொண்டவர்கள்.
மீடியாக்களுக்கு தடை விதிக்கவும், மீடியா நபர்களை கைது செய்யவும் இது உத்தர பிரதேசம் அல்லது ராஜஸ்தான் கிடையாது. ஏராளமான போலி வீடியோக்கள் உலாவி வருகின்றன. அரசியல் கட்சி எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது உங்களுடைய மாநிலம் மற்றும் நண்பர்களை பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளு்ஙகள் என்பதை அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
வங்கதேசத்தில் இருந்து எல்லை கடந்து இந்தியாவுக்குள் வருவதை எல்லை பாதுகாப்புப்படை கவனித்துக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாக நாம் கருத்து கூற இயலாது. பணம் உள்ளவர்கள் விமானங்கள் அல்லது ரெயில்களில் வருகிறார்கள். ஆனால் ஏழைகள் அவ்வாறு வர இயலாது. நாம் எல்லையை கட்டுப்படுத்த முடியாது. அதை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். இது வெளியுறவுத்துறை விவகாரம். நாம் தலையிட முடியாது.
அதேவேளையில் எல்லைக்கு அங்கே இருக்கும் பெங்காலிக்காக உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.
பெங்கால், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களை டாக்கா உரிமை கொண்டாடும் என வங்கதேச கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில் இரண்டு வங்கதேச மூத்த ராணுவ வீரர்கள், இரண்டு மூன்று நாட்களுக்குள் ராணுவ வீரர்கள் பெங்காலை ஆக்கிரமித்து விடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். நீங்கள் பெங்கால், பீகார், ஒடிசாவை ஆக்கிரமித்தால, நாங்கள் என்ன லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டிருப்போமா?. இதுபோன்ற நினைக்க வேண்டாம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
வங்கதேச சூழ்நிலை தொடர்பாக பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் பேசும்போது மம்தா பானர்ஜி மேற்கண்ட கருத்துகளை தெரிவித்துள்ளார்.