இந்தியா

உங்களுக்கு மந்திரி பதவி கொடுத்தவர்தான் இதை ஆரம்பித்தார்.. ஜெய்சங்கர் கருத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

Published On 2023-06-09 06:20 GMT   |   Update On 2023-06-09 06:20 GMT
  • உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண்பான மரபல்ல என ஜெய்சங்கர் கருத்து
  • பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், "வெளிநாடு சுற்றுப்பயணங்களில் இந்தியாவை விமர்சிப்பது ராகுலுக்கு பழக்கமாகிவிட்ட ஒன்று. தேர்தலில் ஒரு முறை ஒரு கட்சி வெல்வதும் மற்றொரு முறை வேறொரு கட்சி வெல்வதும் யதார்த்தமானது. உலகமே நம்மை கூர்ந்து கவனித்து வரும் வேளையில், உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண்பான மரபல்ல. இதன் மூலம் ராகுல் காந்தியின் நம்பகத்தன்மை வளராது", என கூறியிருந்தார்.

மேலும், "2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் அரசாங்கத்திற்கு எதிரான பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாட்டு சக்திகளின் உதவிக்காக அங்கே சென்று விளம்பரப்படுத்தப்படுகிறது" எனவும் கூறினார்.

இந்த கருத்துக்கள் காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், "உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசும் நடைமுறையை ஆரம்பித்தது உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்க காரணமாயிருந்தவர்தான். இதை தாங்கள் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் உண்மை அதுதான்", என பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார்.

மற்றொரு தலைவரான ரன்தீப் சுர்ஜேவாலா, "பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிக்கிறார். அவர் வேறு புது கதையை சொல்வது நல்லது. பிரதமர் மோடி, நாட்டின் 70-ஆண்டு கால வரலாற்றை எள்ளி நகையாடியிருக்கும் பொழுது, இந்திய அரசியலமைப்புக்கான ஆதார அமைப்புகளின் அழிவை குறித்து வெளிநாட்டில் ராகுல் கவலை தெரிவித்திருப்பது ஒன்றும் தவறல்ல", என கூறினார்.

Tags:    

Similar News