மத்திய அரசின் சுகாதாரத் திட்ட பயன்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை- மன்சுக் மாண்டவியா தகவல்
- மக்கள் எளிதில் அணுகும் வகையில் சுகாதார சேவைகளை வழங்க வேண்டும்.
- நாடு முழுவதும் ஆரோக்கிய மையங்களை விரிவுப்படுத்த முயற்சி.
சில்சார்:
அசாம் மாநிலம் சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆரோக்கிய மையத்தை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், மத்திய அரசின் சுகாதாரத் திட்ட சேவைகளை மக்கள் எளிதில் பெறுவதற்கும், ஆரோக்கிய மையங்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2014-ல், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையங்களின் எண்ணிக்கை 25-ஆக இருந்த நிலையில் தற்போது 75-ஆக உயர்ந்துள்ளது. மக்கள் எளிதில் அணுகக் கூடிய தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் மத்திய அரசின் உறுதியுடன் உள்ளது.
மருத்துவ சேவைகளை மேம்படுத்த, நாடு முழுவதும் ஆரோக்கிய மையங்களை விரிவுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சியின் கீழ் 16 புதிய மையங்கள் அமைக்கப் படுகின்றன. அதில் சில்சார் மையமும் ஒன்றாக உள்ளது. சுகாதாரத் திட்ட சேவைகளின் பயன்களை மக்கள் பெறுவதற்காக மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.