இந்தியா (National)

டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டு யாகம் நடத்தியதால் பரபரப்பு

Published On 2024-09-23 05:12 GMT   |   Update On 2024-09-23 05:12 GMT
  • பாந்தம் நானாஜி எம்.எல்.ஏ.வு.க்கும், உமா மகேஸ்வர ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • டாக்டரை தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. பாந்தம் நானாஜி. காக்கிநாடாவில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டிக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக தடவியல் மருத்துவத்துறை தலைவரான டாக்டர் உமா மகேஸ்வரராவிடம் பேசினார்.

அப்போது பாந்தம் நானாஜி எம்.எல்.ஏ.வு.க்கும், உமா மகேஸ்வர ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. மற்றும் அவரது தொண்டர்கள் உமா மகேஸ்வர ராவை தாக்கினர். டாக்டரை தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனை அறிந்த ஆந்திர மாநில மருத்துவ சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.

டாக்டர்கள் மீது எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க பவன் கல்யாண் தனது கட்சி எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டர்களுடன் சேர்ந்து டாக்டரை தாக்கியதற்க்காக அவரைக் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் டாக்டரை தாக்கிய நானாஜி எம்.எல்.ஏ நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டில் யாகம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

செய்யக்கூடாத வகையில் நடந்து கொண்டேன். யாரும் என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பிறரது தவறுக்காக விரதம் இருந்து பூஜை செய்யும் பவன் கல்யாண் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். என் தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். டாக்டரை தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்ட பிறகும் டாக்டர்கள் காக்கிநாடா போலீசில் புகார் தெரிவிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News